புதன், 8 ஆகஸ்ட், 2012

ஜகாத்: ஆயுளில் ஒரு தடவையா?

Post image for ஜகாத்: ஆயுளில் ஒரு தடவையா?ஒரு முஸ்லிமுடைய உடமையில் ஜகாத் கொடுக்கப் பட வேண்டிய அளவுக்கு செல்வம் இருந்து அதில் அவர் ஒரு தடவை ஜகாத் கொடுத்து விட்டால் மீண்டும் ஆண்டுதோறும் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா? வேண்டாமா?
கடந்த 14 நூற்றாண்டு காலமாக ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மா ஏற்றுக்கொண்டதும் அனைத்து
நாடுகளிலும் எல்லாப் பிரதேசங்களிலும் செயல்படுத்தி வருவதுமான இஸ்லாமிய ஷரீஅத் சட்ட நடைமுறை என்னவெனில் :
சொத்தானது ஜகாத் கடமையாவதற்குரிய உச்ச வரம்பை (நிஸாபை) அடைந்திருந்தால் அதில் ஆண்டுதோறும் ஜகாத் கடமையாகும் என்பதாகும். இந்தச் சொத்தில் விளைபொருளும் விவசாய வருமானமும் பூமிக்கு அடியிலிருந்து கண்டெடுக்கப்படும் (கனிமமும்) புதையலும் அடங்காது. மற்றபடி கால்நடைகள், தங்கம், வெள்ளி, வியாபாரச் சரக்கு, ரொக்கப்பணம் போன்றவை அடங்கும்.
இதையே இஸ்லாமிய உலகம் நபிகள் நாயகம் காலந்தொட்டு இன்று வரை நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறது. இந்த நடைமுறைக்கு எதிராக யாரும் செயல்பட்டதில்லை. இந்த நடைமுறையைச் சான்றுகளின் அடிப்படையில் அனைவரும் ஆமோதித்திருக்கின்றனர். கலீஃபாக்கள், ஏனைய நபித்தோழர்கள், தாபயீன்கள், தபஉத்தாபயீன்கள், ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள், கைருல் குரூனில் வாழ்ந்தவர்கள், இஸ்லாமிய ஆட்சி நடைபெற்ற காலங்களிலும் அது நடைபெற்ற பிரதேசங்களிலும் வாழ்ந்த சட்ட மேதைகள், நீதிபதிகள், மூத்த இமாம்கள் யாவரும் இக்கருத்தையே கொண்டிருந்தனர்.
இந்த நடைமுறைக்கு ஆதாரமில்லை என்று கூறி ஒரு சொத்துக்கு ஒரு தடவைதான் ஜகாத் உண்டு. அதைக் கொடுத்து விட்டால் போதுமானது. ஆண்டுதோறும் அதில் ஜகாத் உண்டு என்றெல்லாம் கூறுவது தவறானது என்று இதுகாலம் வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இஸ்லாமிய ஷரீஅத் நடைமுறையைக் குறை கூறி விட்டு சொத்துக்கு ஆயுளில் ஒரு தடவை ஜகாத் கொடுத்து விட்டால் அதன்பிறகு அதில் ஜகாத் தேவையில்லை. கடமையில்லை; அது எத்தனை கோடி சொத்தாக இருந்தாலும் சரி என்று கூறி பொருள் வழி வணக்கமாக உள்ள இந்த ஜகாத் கடமையை சரிவரப் புரிந்துகொள்ளாத சிலர் இன்றைக்கு முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு புதிய கருத்தை விதைக்க முற்படுகிறார்கள்.
இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் நூறு கோடி ரூபாய் வைத்திருக்கும் ஒரு முஸ்லிம் இரண்டரை கோடியை ஜகாத்தாக வழங்கி விட்டால் மீதி தொண்ணூற்றி ஏழரைக் கோடி ரூபாய்க்கு வாழ்நாள் பூராவும் அவர் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை; அதன் உரிமையாளரான கோடீஸ்வரர் மட்டும் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்; ஒரு நூறு ரூபாய்கூட அதில் யாருக்கும் தர வேண்டியதில்லை என்பது இவர்கள் வாதத்தின் சாராம்சமாகும். முஸ்லிம்களில் நூறு கோடி ரூபாய் வைத்திருப்பவர் பலர் இருக்கிறார்கள். 50 கோடி 30 கோடி 20 கோடி என்று வைத்திருக்கும் கோடீஸ்வர முஸ்லிம்கள் பட்டியல் நீண்ட பட்டியலாகும். அதே வேளை முஸ்லிம்கள் கூடுதலாக வாழும் செல்வம் கொழிக்கும் அரபு நாடுகளிலும் ஏனைய பிரதேசங்களிலும் முஸ்லிம்களில் எத்தனையோ பேர் 100, 200, 300 கோடிகளின் அதிபதிகளாக மில்லியனர்களாக, பில்லியனர்களாக வாழ்கிறார்கள். இவர்களெல்லாம் ஆயுளில் ஒரு தடவை ஜகாத் கொடுத்தால் போதும் எனில் இதை விட ஏழைகள் மீது இழைக்கப்படும் கொடுமை வேறென்ன இருக்க முடியும்?
ஜகாத்திற்கு இந்தப் புதிய கருத்தை உருவாக்கி இஸ்லாமிய மார்க்கத்திலும் முஸ்லிம் உலகிலும் காலங்காலமாக உறுதியாகப் பின்பற்றப்பட்டு வந்த ஒரு ஷரீஅத் நடைமுறைக்கு இதுவரை யாராலும் நினைத்துக் கூட பார்க்காத ஒரு விளக்கம் கொடுத்து ஜகாத்தை ஒரு சர்ச்சைக்குரிய வழிபாடாக இவர்கள் ஆக்கி விட்டார்கள். இதனால் விளைந்தது என்ன? இந்தியாவில் தென்பிராந்தியங்களில் இப்பொழுது வணிகர்கள் பற்பல தொழிலதிபர்களும் செல்வந்தர்களும் ஆண்டுதோறும் ஏழை எளியோர்க்கு ஜகாத் வழங்கி வந்ததை நிறுத்தி விட்டார்கள்.  ஏழைகள் மீது அக்கிரமமிழைக்கும் முதலாளிகள் நிறைந்த இந்த உலகில் ஜகாத் கொடுக்காமல் தட்டிக் கழிக்க இவர்களின் இந்தப் புதிய கருத்தும் நிலைப்பாடும் வகை செய்கின்றன.
இவர்கள் முன்வைக்கும் வாதங்களுக்கு ஆதாரம் என்னவெனில்
1. மீண்டும் மீண்டும் ஆண்டுதோறும் ஜகாத் கொடுப்பதற்கு இவர்கள் ஆராய்ந்து பார்த்தபோது சான்றுகள் எதுவும் குர்ஆனிலும் சுன்னாவிலும் கிடைக்கவில்லையாம்.
2. ஆண்டுதோறும் ஜகாத் வழங்கினால் வழங்குகிறவர்கள் சிரமப்படுவார்களாம். அவர்கள் ஏழ்மையில் தள்ளப்பட வாய்ப்புள்ளதாம்.
3. ஜகாத் என்பது செல்வத்தின் அழுக்காம். அதை ஒரு தடவை வழங்கிவிட்டால் செல்வம் தூய்மையடைந்து துப்புரவாகி விடுமாம். துப்புரவான செல்வத்தை மீண்டும் துப்புரவாக்க வேண்டியதில்லையாம்.
ஷரீஅத்தில் இவர்கள் கண்டுபிடித்த இந்தப் புதிய கருத்துக்கு இவையே முக்கிய ஆதாரங்கள். இறைவன் கூறியதாக சில திருக்குர்ஆன் வசனங்களையோ இறைத்தூதர் கூறியதாக சில ஹதீஸ்களையோ காட்டி ஆண்டுதோறும் ஜகாத் இல்லை; கொடுக்காதீர்கள் என்று குர்ஆன் கூறுகிறது அல்லது ஹதீஸ் கூறுகிறது என்று
ஏற்க முடியாது என்கிறார்கள். அவர்களுக்கு வஹியா வருகிறது? என்று கேட்பதுடன் அவர்களிடமும் தவறு இருக்கிறது என்று வாதம் பண்ணி அத்தவறுகளையும் குறைகளையும் தோண்டியெடுத்துப் பட்டியலிடுகிறார்கள்.
உண்மை என்னவெனில் ஒரு முஸ்லிம் எத்தனை பெரிய ஆராய்ச்சியாளராக இருந்தாலும் இறைமறை குர்ஆனையும் இறைத்தூதரின் சுன்னாவையும் நபியின் ஆருயிர்த் தோழர்களும் அவர்களுக்குப் பிறகு வந்த ஸலஃப் அறிஞர்களும் விளங்கிக் கொண்டதைப் போல் விளங்கிக்கொள்ள முற்பட வேண்டுமே தவிர ஒருவர் தன் அறிவுக்கு எட்டியபடி விளங்குவதில் நிச்சயமாக விபரீதம் ஏற்பட்டு வழிதவறிட அதிக வாய்ப்புள்ளது. ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டாம் என்பதற்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள், காணும் நியாயங்கள் எதிலும் நியாயமிருப்பதாகத் தெரியவில்லை.
மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பவர் ஏழையாகி
விடுவார் என்பது முற்றிலும் தவறான கருத்து. ஜகாத்தினால் செல்வத்திற்கு வளர்ச்சியே தவிர குறைவு இல்லை. ஜகாத்தின் அகராதிப் பொருளில் ஒன்று “”நமாஃ” வளர்ச்சி என்பதாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “”லா யன்குஸு மாலுன் மின் சதகத்தின்” ஜகாத் உட்பட எந்த தானதர்மம் செய்வதானாலும் செல்வம் குறைந்து விடாது. (முஸ்லிம், திர்மிதி, அஹ்மது) இது முஸ்லிம்களுடைய நம்பிக்கை.
இறைவனும் குர்ஆனில் 2 : 261வது வசனத்தில் இக்கருத்தை உருவகப்படுத்தி அழகிய உவமையுடன் சொல்லிக் காட்டுகிறான். அல்லாஹ்வின் வழியில் செலவிடப்படும் ஜகாத் மற்றும் இதர தான தர்மம் எதுவானாலும் அது செல்வத்தை பன்மடங்காகப் பெருக்கும். மூலதனத்தை வளர்ச்சியடையச் செய்யும். ஆண்டுதோறும் ஜகாத் நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று எனில் அதை இஸ்லாம் யார் மீதும் சுமத்தியிருக்காது. அத்துடன் ஜகாத் செல்வத்தைத் தூய்மைப்படுத்தக் கூடியதே என்று கூறுகிறவர்களின் கருத்திலும் உண்மையில்லை. ஜகாத் செல்வத்தையல்ல, ஜகாத் வழங்கிய மனிதனை சுத்தப்படுத்துகிறது. கருமித்தனம், பேராசை, ஏழைகள் மீது இரக்கம் காட்டாமல் வாழும் போக்கு இன்னும் இது போன்ற கசடுகள் குடிகொண்ட மனிதனை ஜகாத் தூய்மைப்படுத்துகிறது.
செல்வத்தின் மீது இது போன்ற அழுக்குகளோ கசடுகளோ படிவதில்லை. ஆக தூய்மைப்படுத்தப்பட வேண்டியவன் மனிதனாகத்தான் இருக்க முடியும். செல்வமல்ல. இதையே திருமறைக் குர்ஆன் இப்படிச் சொல்கிறது: “”நபியே, அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை வசூல் செய்து கைப்பற்றும். அதன் மூலம் அவர்களை அது தூய்மைப்படுத்தும்; பரிசுத்தமாக்கும்.” (9 :103) ஜகாத் செல்வத்தைத் தூய்மைப்படுத்துகிறது என்ற கருத்துக்கு ஒரு குர்ஆன் வசனமோ அல்லது ஸஹீஹான ஒரு ஹதீஸோ சான்றாக இல்லை. இருப்பதாக சிலர் கருதும் ஹதீஸ் பலவீனமானது. ஜகாத் வழங்குகிறவர் மனதை சுத்தமாக்குவது போல வாங்குகிறவர் மனதையும், மேலும் வழங்குகிறவரும் வாங்குகிறவரும் வாழும் சமூக அமைப்பையும் சுத்தப் படுத்துகிறது. ஜகாத் கொடுத்த செல்வந்தர்மீது ஏழை எளியவர்கள் பொறாமை கொள்ளமாட்டார்கள். அவர்களை வெறுத்து ஒதுக்க மாட்டார்கள். விரோதம் குரோதம் மன மாச்சரியம் பகைமை வர்க்கப் போராட்டம் எதுவும் இல்லாத சுத்தமான ஒரு சமுதாய அமைப்பை ஏற்படுத்த ஜகாத் வகை செய்கிறது.
இவர்களின் வாதத்தை நியாயமற்றதாக்குவதற்கு இது விஷயத்தில் நபியின் ஆருயிர்த் தோழர்களின் நடைமுறை ஒன்று மட்டுமே போதுமானதாக உள்ளது. அதை மட்டும் எடுத்துக்கூறி நாம் இது விஷயத்தில் நமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியிருக்க முடியும். ஏனெனில் நபித்தோழர்கள் மற்றவர்களை விட பல மடங்கு மார்க்கத்தில் தெளிவு பெற்றவர்கள். பின்பற்றப்பட வேண்டியவர்கள். அவர்களைப் பின்பற்றுவது குர்ஆனுக்கும் நபிவழிக்கும் எதிரான காரியமல்ல. அவர்களுடைய சொல்லும் செயலும் ஆதாரமாக ஏற்கப்படும். அவர்கள் முந்திய காலத்து முதல் நூற்றாண்டின் மூமின்கள்; முஸ்லிம்கள். அவர்கள் வாழ்ந்த வழியில் நாம் நடைபோடுவதில் தவறேதுமில்லை. குர்ஆன் இறங்கிய அன்று குர்ஆன் மூமின்கள், முஸ்லிம்கள் என்று குறிப்பிடுவதெல்லாம் இவர்களைப் பற்றித்தான்.
“”ஒருவருக்கு நேர் வழி தெளிவான பிறகு இறைத்தூதரிடம் பகைமை காட்டுவதில் முனைப்பு காட்டி இறை நம்பிக்கையாளர் (நபித்தோழர்)களின் போக்குக்கு எதிரான போக்கை அவர் கடைப்பிடிப்பாராயின் அவரை அவர் போன போக்கில் விட்டு விட்டு பிறகு அவரை நரகில் வீசி எறிவோம். அது மிகவும் கேடுகெட்ட தங்குமிடமாகும்.” (அல்குர்ஆன் 4 : 115)
இவ்வசனத்தில் இறைநம்பிக்கையாளர்களின் போக்கு என்பது ஒட்டுமொத்த நபித்தோழர்களைக் குறிக்கும். அவர்கள் கடைப்பிடித்த நடைமுறையைக் குறிக்கும். அவர்களின் அந்த வழிமுறைக்கு எதிராக நடப்பவரின் முடிவு நரகமே என்பது இந்த வசனத்தின் சாராம்சமாகும்.
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) கூறினார்கள் : … எனக்குப் பின் ஏராளம் கருத்து வேறுபாடுகளைக் காண்பீர்கள். அப்பொழுது நீங்கள் எனது வழிமுறையையும் நேர்வழி நடந்த எனது கலீஃபாக்களின் வழிமுறையையும் இறுகப் பற்றி நின்று செயல்படுங்கள். (அபூதாவூத், இப்னுமாஜா)
முதலில் முந்தி முந்திக் கொண்டு இஸ்லாத்திற்கு வந்த முஹாஜிர்கள், அன்சார்கள், மேலும் அவர்களை யார் நல்ல விஷயத்தில் பின்பற்றி வாழ்ந்தார்களோ அவர்கள் யாவரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். அப்படிப்பட்டவர்களுக்கு இறைவன் சொர்க்கப் பூங்காவைத் தயார் செய்து வைத்துள்ளான். அதன் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அது மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 9 : 100)
இறைத்திருப்தியும் நிலையான சொர்க்க வாழ்வும் நபித்தோழர்களில் முஹாஜிர்களையும் அன்ஸார்களையும் நல்ல முறையில் பின்பற்றி வாழ்கிறவர்களுக்குக் கிடைக்கும் கூலியாகும். காரணம் அவர்களுடையவும் பொதுவாக நபித்தோழர்களுடையவும் நடைமுறை பழக்க வழக்கங்கள் இஸ்லாமிய மார்க்கச் சட்டங்களின் செயல்வடிவமாக உள்ளன. இப்படிப்பட்ட அந்தஸ்திற்குரிய நபித்தோழர்களை மார்க்க விஷயத்தில் ஏற்கக்கூடாது என்று கூறும் இவர்கள் வேறு யாருக்கு மதிப்பளிக்கப் போகிறார்கள். இந்த சஹாபாக்கள் கண்டறிந்த நியாயங்களை, அவர்கள் கூறிய சட்டங்களை, செய்து காட்டிய நடை முறைகளை நியாயப்படுத்துவது கூடாது என்றால் வேறு யாரை இவர்கள் நியாயப்படுத்தப் போகிறார்கள்? ஆயினும் இன்றைக்கு நாமும் உலக அறிஞர்களும் ஆண்டுதோறும் ஜகாத் உண்டு என்று கூறியதற்கு நபித்தோழர்களின் நடைமுறையை மட்டும் ஆதாரமாகக் கூறவில்லை.
முதலில் ஜகாத் விதியாக்கப்பட்டதன் நோக்கத்தைப் பார்க்கிறோம். வறுமையைக் களைவதுதான் அதன் முதல் நோக்கமாக உள்ளது. ஜகாத் பெற தகுதியுள்ள எட்டுப் பிரிவினர்களை இறைவன் பட்டியலிட்டுக் கூறியபோது முதல் பிரிவிலும் இரண்டாவது பிரிவிலும் ஏழை எளியவர்களை (ஃபக்கீர், மிஸ்கீன்களை) குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன் 9 : 60)
அவர்களுக்குப் பிறகுதான் ஏனைய பிரிவினர்களைக் குறிப்பிடுகிறான். ஆகவே “வறுமை ஒழிப்பு’ ஜகாத்தின் முதல் நோக்கமாகும் என்பது தெளிவாகிறது. ஒரு சொத்துக்கு ஆயுளில் ஒரு தடவை மட்டும் ஜகாத் கொடுப்பதனால் வறுமை ஒழியாது, ஆண்டுதோறும் கொடுத்தாக வேண்டும்.
இரண்டாவது : செல்வமும் அதன் பயனும் சமுதாயம் முழுவதிலும் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். சமுதாயம் முழுவதும் செல்வத்தினால் பயனடைய வேண்டும். பணக்குவியல் ஏற்பட்டு விடக் கூடாது என்று திருமறை குர்ஆன் கூறுகிறது. “”அந்தச் செல்வம் உங்களிலுள்ள செல்வந்தர்களிடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது” என்று கூறுகிறது. (அல்குர்ஆன் 59 : 7)
பொதுவாக ஜகாத் விதியாக்கப்பட்டதும், மேலும் இறைவழியில் செலவு செய்வதைத் திருமறைக் குர்ஆன் அதிக அளவில் வலியுறுத்துவதும் இந்த நோக்கத்தை அடைவதற்காகத்தான். அதாவது செல்வம் பரவலாக எல்லோருக்கும் பயன்பட வேண்டும். மேலும் பணக்குவியலைத் தடுப்பதும் பணவீக்கம் ஏற்படாமல் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதும் குறிப்பிட்ட ஒரு மனிதரிடம், அல்லது சில முதலாளிகள் வர்க்கத்திடம் மட்டும் செல்வம் தேங்கி விடாமல் பாதுகாப்பதும் ஜகாத்தின் குறிக்கோளாகும். இவ்வாறு செல்வத்தின் பயனை அனைவரும் அடைவது நோக்கமாக உள்ளது. இதற்கு சுழற்சி முறையில் செல்வம் வளர்ந்து பெருகி சமூகம் பயன் அடைய வேண்டும். இது இஸ்லாமியப் பொருளாதாரத்தின் அடிப்படையாக உள்ளது. இல்லையெனில் ஏழைகள் ஏழையாகிக் கொண்டே இருப்பார்கள். செல்வந்தர்கள் மென்மேலும் செல்வத்தில் மிதந்துகொண்டு வாழ்வார்கள். இதை இறைவன் விரும்பவில்லை என்பதைத்தான் இந்த 59 : 7வது வசனம் காட்டுகிறது.
இந்த இலக்கை அடைவதற்கு நிசாப் இருந்தால்
ஆண்டுதோறும் ஜகாத் கொடுப்பதே சரியான தீர்வாகும். நூறு கோடி வைத்திருப்பவர் ஒரு தடவை இரண்டரை கோடியை ஜகாத் கொடுத்து விட்டு மீதி 97.5 கோடியை ஆயுள் காலம் முழுவதும் யாருக்கும் வழங்காமல் வைத்திருப்பதும் அதில் எந்தத் தவறுமில்லை என்று ஒரு முஸ்லிம் நம்புவதும் வறுமையை நீக்காது. சுழற்சி முறையில் செல்வமும் வளராது. பொருளாதாரத் தேக்க நிலையே ஏற்படும்.
மூன்றாவது : ஆண்டுதோறும் நிஸாப் இருந்தால் ஜகாத் உண்டு என்று கூறுகிறவர்களின் நிலைப்பாட்டிற்கு ஸஹீஹான ஹதீஸ்கள் சான்றுகளாக உள்ளன. திருமறைக் குர்ஆனுக்கு அடுத்தபடியாக அவர்கள் ஹதீஸ்களையே ஆதாரமாகக் கொள்கிறார்கள். அவர்கள் கூறும் அந்த ஹதீஸ்கள் விமர்சகர்கள் பார்வையில் நம்பத்தகுந்த பலமான ஹதீஸ்களாகவும் உள்ளன. அவற்றை ஒட்டுமொத்தமாகப் பலவீனப்படுத்தி அவை சரியில்லாத ஹதீஸ்கள் என்று கூறி தள்ளுபடி செய்வதில் எந்த நியாயமும் இல்லை. அவற்றைக் குறித்து அவை நம்பகமான ஹதீஸ்கள் இல்லை என்று சொல்வதும் அவற்றின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் யாரேனும் ஓர் அறிவிப்பாளர் பற்றி எங்கிருந்தாவது ஒரு விமர்சனத்தைக் கண்டறிந்து உடனே அந்த ஹதீஸை மொத்தமாக அப்படியே தூக்கிப் போடுவதும் தள்ளுபடி செய்வதும் கண்டித்தக்கதாகும். இது ஹதீஸ் விமர்சகர்களின் (நுக்காதுல் ஹதீஸின்) போக்கே அல்ல.
அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையை மையப் படுத்தி ஆய்வு செய்து முடிவெடுக்கும் “தஸ்ஹீஹுல் ஹதீஸ்’ விஷயத்தில் ஒன்றுபட்ட கருத்தினை ஸஹீஹான அனைத்து ஹதீஸ்களுக்கும் எதிர்பார்க்க முடியாது. ஒருவர் பார்வையில் நம்பகமானது ஸிக்கதுன் என்று கூறப்பட்ட ஒரு “ராவி’ அல் ஜர்ஹு வத்தஃதீலுடைய உலமாக்களின் இன்னொருவர் பார்வையில் “ஸிக்கத்’ அல்ல நம்பகத்தன்மை அறியப்படாதவர் என்று கூறப்படுவதில்லையா? “குதுபுர் ரிஜால்’ புத்தகங்களில் பார்வையிடும் அனைவருக்கும் இது தெரிந்த விஷயம்தான். ராவிகள் மீதுள்ள விமர்சனப் பார்வையில் பதிவான வேறுபாடுகள் ஹதீஸ்களை சரிகாணும் விஷயத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஏற்கத்தக்க மக்பூலான ஸஹீஹான ஹதீஸ்களின் தராதரங்கள் மாறுபடுவதற்கும் அப்படிப்பட்ட ஹதீஸ்களின் பெயர்கள் மற்றும் வர்ணனைகள் வித்தியாசப்படுவதற்கும் ராவிகள் பற்றி அல்ஜர்ஹு வத்தஃதீலுடைய அறிஞர்களின் விமர்சனப் பார்வையே காரணமாகும்.
ஹதீஸை “தஸ்ஹீஹ்’ பண்ணுவதில் (நம்பத்தக்க ஹதீஸ் என்று தீர்ப்பு கூறுவதில்) ஹதீஸ் விமர்சகர் அனைவரும் ஒருமித்த கருத்துடையவர்களல்லர். இதனால்தான் “மராத்திபுஸ் ஸிஹ்ஹா’ ஸஹீஹான ஹதீஸ்களின் பெயர்கள் வேறுபடுவதும் இந்த அடிப்படையில்தான். ஸஹீஹ், ஹஸன், ஸஹீஹுன் லிதாத்திஹி, ஸஹீஹுன் லிகைரிஹி, ஹஸனுல்லி தாதிஹி, ஹஸனுன் லி கைரிஹி, ஹஸனுன் கரீபுன் என்றெல்லாம் ஏற்புடைய ஸஹீஹான ஹதீஸ்களின் பெயர்களில் காணப்படும் வேறுபாடுகளுக்கு அறிவிப்பாளர்கள் பற்றி “அல் ஜர்ஹு வத்தஃதீலுடைய’ உலமாக்களின் விமர்சனப் பார்வையே காரணமாகும்.
“அல் முஸ்தத்ரக்குடைய’ ஆசிரியர் இமாம் ஹாகிம் அவர்கள் ஹதீஸ்களை நியாயப்படுத்துவதில், மேலும் அவற்றை ஏற்புடையதாகக் காண்பதில் கவனக்குறைவுடையவர் என்று ஹதீஸ் நிபுணர்கள் கூறுகின்றனர். இப்னு குஸைமா, இப்னு ஹிப்பானை விட இது விஷயத்தில் மேம்பட்டவர் என்று கூறினர். ஹதீஸ்களை தஸ்ஹீஹ் செய்வதில் இமாம் புகாரியும், இமாம் முஸ்லிமும் மிகவும் நுணுகி ஆராய்ந்து முடிவெடுப்பவர்களாவர். இவர்கள் அனைவருமே ஸஹீஹான ஹதீஸ்களை மட்டும் தொகுத்து வழங்கிய தொகுப்பாசிரியர்கள் ஆவர். அப்படியாயின் ஒரு ஹதீஸின் ஒரு ராவி பற்றி ஏதேனும் ஒரு விமர்சனத்தைக் கண்டவுடன் அந்த ஹதீஸை மொத்தமாக ஒதுக்கித் தள்ளிவிடுவது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல; அது ஹதீஸ் கலை நிபுணர்களின் மரபே அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
நமது நிலைப்பாட்டை வலுப்படுத்தும் ஒரு ஹதீஸை ஆய்வு செய்வோம். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று விஷயங்களை யார் செய்கிறார்களோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை ருசித்தவராவார்… இந்த ஹதீஸ் தொடரில் வருகிற “”வ அஃத்தா ஸக்காத்த மாலிஹி தய்யிபத்தன் பிஹா நஃப்ஸுஹு ராஃபிதத்தன் அலைஹி ஃபீ குல்லி ஆமீன்” எனும் ஹதீஸ் வாசகம் ஆண்டுதோறும் ஜகாத் உண்டு என்று கூறும் கருத்துக்கு மிகவும் வலுசேர்க்கும் ஆதாரமாக உள்ளது. அதாவது ஒவ்வொரு வருடமும் தனக்குரிய பொருளில் மனம் விரும்பி ஜகாத்தைத் தாமாக முன்வந்து வழங்குகிறவர் எனும் ஹதீஸ் வாசகம் ஆண்டுதோறும் ஜகாத் உண்டு என்று கூறும். இந்த ஹதீஸை அபூ தாவூத், தப்ரானி, பைஹகி போன்ற இன்னும் பல ஹதீஸ் தொகுப்புகளில் காணலாம். நவீன கால ஹதீஸ் விமர்சகர் ஷைகு அல்பானி வரையிலும் இந்த ஹதீஸை ஏற்கத்தக்க ஸஹீஹான ஹதீஸ் எனக் கூறியுள்ளார்.
ஆனால் இந்த ஹதீஸை ஜகாத் விஷயத்தில் புதிய கருத்து கூறியவர்கள் தள்ளுபடி செய்து விடுகிறார்கள். காரணம்? ஜகாத் விஷயத்தில் அவர்கள் எடுத்த நிலைப்பாட்டிற்கு இந்த ஹதீஸ் எதிரானது. அவர்கள் நிலைப்பாட்டை இது உடைத்தெறிகிறது. ஆகவே இந்த ஹதீஸைப் பல வீனப்படுத்தவும், பற்பல குற்றச்சாட்டுகளை இதன்மீது கூறவும், இதைத் தள்ளுபடி செய்யவும் முயன்றனர். இது குறித்து “சனத் இத்திஸால்’ இல்லாத “முன்கதிவு’ (அறிவிப்பாளர் துண்டிக்கப்பட்ட) ஹதீஸ் என்றனர். “முன்கதிஉ’ ஆன ஹதீஸை மொத்தமாகத் தள்ளுபடி செய்யத் தேவையில்லை. நம்பகமான அறிவிப்பாளர் வரிசையில் ஓர் அறிவிப்பாளருடைய “இன்கிதாபு’ விடுபட்டுப் போதல் அந்த ஹதீஸை பலவீனப்படுத்தாது. அது ஏற்புடைய ஹதீஸ்தான் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றனர். இத்ததிஸாலுஸ் ஸனதில் கிஃப்பதுல் இத்திஸால் இருந்தாலும் ஹதீஸ் ஏற்கப்படும். அப்பொழுதும் அது “முத்தஸில்’ தான் “முன்கதிவு’ அல்ல.
இனி விடுபட்டவர் “ஸிக்கத்’ நம்பகமானவர் என்று வேறு ஏதேனும் வழிகளில் அறிவிக்கப்பட்டிருக்குமானால் அல்லது இன்னொரு தொடரில் அறிவிப்பாளர் வரிசை முத்தஸிலாக தொடர்ச்சியாக விடுபடாமல் அறிவிக்கப்பட்டிருப்பின் அப்பொழுதும் அது “முன்கதிவு’ அறிவிப்பாளர் துண்டிக்கப்பட்ட ஹதீஸ் அல்ல. ஸஹீஹான ஹதீஸ் தான்; தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்பது ஹதீஸ் நிபுணர்களின் கருத்தாகும். நாம் கூறும் இந்த ஹதீஸில் விடுபட்டவர் அப்துர் ரஹ்மான் பின் ஜுபைர் ஆவார். இதை ஹாபிஸ் இப்னு ஹஜருல் அஸ்கலானி அவர்கள் தம்மிடமிருந்த அபூ தாவூதின் ஒரு மூலப்பிரதியில் அறிவிப்பாளர் துண்டிக்கப்படாமலுள்ளது என்று அல் இஸாபாவில் குறிப்பிடுகிறார்.
இந்த ஹதீஸ் மீது எதிர்க் கருத்துடையவர்கள் கூறிய அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு முஆவியா அல் காழி குறித்து அவர் நபித்தோழரா இல்லையா என்ற சந்தேகங்களை எழுப்பி அதைத் தள்ளுபடி செய்ய முயன்றனர். ஆனால் அவர் உண்மையில் நபித்தோழர்தான் என்று பல வழிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஹதீஸின் ஸனதில் இடம் பெறும் அம்ரிப்னுல் ஹாரிசுல் ஹிம்மசியின் நம்பகத்தன்மையில் சந்தேகம் எழுப்பினர். ஆனால் அவரும் நம்பகத்தன்மை அறியப்பட்டவர் என்று இமாம் தஹபீ அல் காஷிபிலும் தக்ரீபுத் தஹ்தீபில் இப்னு ஹஜரும், கிதாபுஸ் ஸிக்காதில் இப்னு ஹிப்பானும் விவரித்துக் கூறியுள்ளனர். ஆகவே இந்த ஹதீஸ் ஆண்டுதோறும் ஜகாத் உண்டு என்பதற்கு சரியான வலுவான சான்றாக உள்ளது என்பதை இந்த இமாம்கள் பதிவு செய்துள்ளார்கள். இதை எதிர்க்கருத்துடையவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது போன்று இன்னும் பல ஹதீஸ்கள் ஆண்டுதோறும் ஜகாத் உண்டு என்பதற்குச்சான்றுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் எதிர்க்கருத்துடையவர்கள் கவனத்தில் கொண்டு முடிவு செய்ய வேண்டும். உண்மை என்னவெனில், நிஸாப் (ஜகாத் கொடுப்பதற்குரிய குறைந்தபட்ச ஒதுக்கீடு) இருந்தால் ஆண்டுதோறும் ஜகாத் உண்டு என்று கூறுகிறவர்கள் அதற்குரிய சான்றுகளை ஆய்வு செய்யாமல், இந்த முடிவுக்கு வரவில்லை. திருக்குர்ஆன் வசனங்களும் ஸஹீஹான பல ஹதீஸ் ஆதாரங்களும் இருப்பதுடன், கலீஃபாக்கள் மற்றும் நபித்தோழர்களின் நடைமுறையும் சான்றுகளாக உள்ளன. அதன்படியே இஸ்லாமிய உலகு கடந்த பல நூற்றாண்டுகளாக ஜகாத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.