புதன், 19 டிசம்பர், 2012

சமூக புணரமைப்பில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு


இஸ்லாமிய எழுச்சி உலகெல்லாம் பரவியுள்ளது. சிறுபான்மை சமூகத்திலும் கூட அதன் அலைகள் வீசாமலில்லை. இவ்வாறு முஸ்லிம் சமூகம் விழித்தெழுந்து மீள் புணரமைப்பில் ஈடுபடத் துவங்கியுள்ளது.இலங்கையின் முஸ்லிம் சிறுபான்மை எந்நிலையில் உள்ளது? அங்கு மீள் புணரமைப்புச் செயற்பாட்டின் தேவை எவ்வாறுள்ளது? இளைஞர் சமூகம் அங்கு செய்யவேண்டிய பங்களிப்பு யாது? என்பது பற்றி ஆய்வில் ஈடுபடல் இக்காலகட்டத்தின் தேவை. அந்த வகையில் முஸ்லிம் இளைஞர்கள் இந்த சமூகத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகள், அவர்களது பொறுப்பு பற்றி இக்கட்டுரை சுருக்கமாக ஆய்வு செய்ய முயல்கிறது.ஒரு சமூகத்தின் சொத்து, செல்வம் என்பது அதன் பௌதீக வளங்கள், பெருட் செல்வங்களல்ல. அவையெல்லாம் சமூகம் அடைய விரும்பும் இளக்குகளுக்கான சாதனங்கள் மட்டுமே. மனிதனே ஒரு சமூகத்தின் உண்மையான செல்வம். அடிப்படை வளம். அந்த மனிதன் செயலூக்கமும் செயற்திறனும் அற்றவனாக இருக்கும் போது பௌதீக வளங்கள் பயனற்றுப் போகும். அவற்றால் எதனையும் சாதிக்க முடியாது போகும். மனிதர்களில் உழைப்புத் திறனும் வேகமும், வீரயமும் கொண்ட காலப்பிரிவு இளமை. எனவே இளைஞர்கள் ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக அமைகிறார்கள். ஒரு சமூகத்தின் இளைஞர்களது நாடித் துடிப்பை பரீட்சித்துப்பார்த்து விட்டால் அந்த சமூகத்தின் நிகழ், எதிர்கால நிலையையே மட்டிட்டு விட முடியும். இப்பின்னணியிலே எந்த சமூகமும், நாடும், இளைஞர்களின் சமூகப்பங்களிப்பை பெரிதும் எதிர்பார்க்கிறது.

எந்தப்புரட்சியின் போதும், போராட்டத்தின் போதும் இளைஞர்களே போராட்ட சக்தியாகிறார்கள். அதன் இயக்க சக்தியாக   -டைனமோவாக- அவர்களே அமைகிறார்கள். ஏனெனில் துடிப்பும், வீரியமும், வேகமும் நிறைந்த இப்பருவம் எப்போராட்டத்திலும் அவர்களை;க் குதிக்கச் செய்கிறது. இளமை தூய்மையும் அர்ப்பனிப்பும் நிறைந்தது. இலாப நஷ்டக்கணக்குப் பார்த்து அது செலவழிப்பதில்லை. எனவே மாற்றமொன்று தேவையென என்னும் சமூகமொன்று அதற்காக இளைஞர்களையே எதிர்ப்பார்க்கிறது.சமூகமென்பது அதன் கௌ;கை, தனித்துவம், ஆளுமையையே குறிக்கின்றது. குறிப்பாக இஸ்லாமிய சமூகமென்பது வெறும் இனமோ, மொழியோ, பௌதீக எல்லைகளோவன்று கொள்கையும் சிந்தனைத் தனித்துவமுமே அதனை அடையாளப்படுத்துகிறது. எனவே சமூக அழிவு என்பது குறிப்பிட்ட சமூகத்தின் ஒவ்வொரு தனிமனிதனும் அழிந்து விடலை, இறந்து போவதை குறிக்காது. குறிப்பிட்ட சமூகம் தன் சிந்தனைத் தனித்துவத்தை, நாகரீக கலாச்சார, அடையாளத்தை இழந்து விடலையே அது குறிக்கிறது. வரலாற்றில் வாழ்ந்த சமூகமொன்று அழிந்துபோய் விட்டது எனக் கூறும் போது அது அந்நாகரீகத்தின் ஒவ்வொரு தனிமனிதனும் தொடராது இடைநடுவே பௌதீக ரீதியாக அழிந்து போனார்கள் என்ற கருத்தை குறிக்காது மாற்றமாக அந்நாகரீகத்தின் தனிமனிதர்கள் இன்னொரு கொள்கை;கு, நாகரீத்திற்கு மாறிப்போனார்கள். மானசீக அழிவுக் குற்பட்டார்கள் என்பதையே குறிக்கும். இவ்வாறான அழிவுக்கு இரு காரணங்களைக் கூறமுடியும் .
 1. குறிப்பிட்டதொரு சமூகத்தின் சிந்தனைகளும். கொள்கைகளும், தொடரான அடுத்தத்த தலைமுறையினருக் நகர்த்தப்படாது அறுந்து போதல்.
 2. பிறசமூகமொன்றின் சிந்தனை ஆதிக்கத்திற்குட்பட்டு அச்சமூகத்தின் நாகரீகத்தை, சிந்தனையையும் தழுவிக் கொள்ளல்.
அடுத்து வரும் தலைமுறையினருக்கு குறிப்பிட்ட சமூகத்தின் நாகரீகத்தையும், நகர்த்தும் பிரதான ஊடகம் குடும்பம். அக்குடும்பத்தின் தலைமை ஆணாயினும், பெண்ணாயினும் இளைஞர்களிடமே உள்ளது. அத்தோடு முற்பரம்பரையிடமிருந்து நாகரீகம் என்ற அமானிதத்தை கையேற்பவர்களும் இளைஞர்களே.பிறநாகரீகமொன்று சிந்தனைப் படையெடுப் பொன்றை நிகழ்த்தும் போது தமது பிரதான இலக்காகக் கொள்வது இளைஞர்களையே. அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தினால் சமூகத்தையே மாற்றிவிடமுடியும் என்பது முற்றிலும் உண்மையே. நவீன காலப்பிரிவில் முஸ்லிம் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட சிந்தனைப் படையெடுப்பின் அமைப்பையும், அதன் தாக்கங்களையும், ஆய்பவர்கள் இந்த உண்மையை நன்கு புரிந்து பொள்ள முடியும்.இந்த வகையில் இளைஞர்கள் என்போர் ஒரு சமூகத்தின் பாதுகாப்பு அரணாகவும் அமைகிறார்கள். இவ்வரண் விழும்போது சமூகம் அழிவு, அபாயத்தை எதிர்நோக்குகிறது.
அல்குர்ஆனில் இளைஞர்கள்
 இளைஞர்களே போராட்ட சக்தி என்ற உண்மையை அல்குர்ஆன் உறுதிப்படுத்திக் காட்டுகிறது. இக்கருத்தை விளக்கும் வகையிலான சில வசனங்கள் கீழே தரப்படுகின்றன.
நபிமார்களைப் பின்பற்றியோர் சிலர் இளைஞர்களே! :
அல்குர்ஆன் மூஸா (அலை) அவர்களது பிரச்சார வாழ்வு பற்றி விளக்கும் போது கீழ்வருமாறு கூறுகிறது.பிர்அவ்னுக்கு அஞ்சியும் அவன் கொடுமைப்டுத்துவானோ எனப்பயந்த தம் சமூகப்பிரமுகர்களுக்கு அஞ்சியும் மூஸாவை அவர்களுடைய சமூகத்தாரில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சில இளைஞர்களைத் தவிர!|| (யூனுஸ்: 83) பனூ இஸ்ரேல் சமூகத்தினர் பிர்அவ்னின் கீழ் அடிமைப்பட்டு வாழ்ந்த அந்த வாழ்வை ஏற்றுப் பழகிப் போனார்கள். தம் மீது இழைக்கப்படும் அநியாயங்களின் முன்னால் பணிந்து, சரணடைந்து அதுவே இயல்பான வாழ்வு எனக் கண்டு வாழ்ந்தார்கள். இந்நிலையில் மூஸா (அலை) அவர்கள் அச்சமூக விடுதலைக்காகப் போராட எழுந்த போது அவரோடு ஒத்துழைத்து உண்மையாகவே போராட முன்வந்தவர்கள் சில இளைஞர்கள் மட்டுமே.அடிமைப்பட்ட ஒரு சமூகத்தில் போராட்ட சக்தியாக எஞ்சி நிற்கக் கூடியவர்கள் இளைஞர்களே, என்ற ஆழ்ந்த சமூக உண்மையை இந்த இறைவசனம் எமக்குத் தெளிவுபடுத்துகிறது.
 குகையில் வாழ்ந்த சில இளைஞர்கள்:
சுற்றியிருக்கும் ஜாஹிலிய்யத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள முற்பட்டு குகையில் போய்த்தஞ்சமடைந்தோர் குறித்து அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.ஷஅவர்கள் தமது இரட்சகனை நம்பிக்கை கொண்ட இளைஞர்கள். அவர்களுக்கு தாம் மேலும் நேர்வழியை அதிகரித்துக் கொடுத்தோம்.| (கஹ்ப்: 13) இளமை அனுபவிக்கும் வயது. உலக சுகபோகங்களின் பக்கம் ஈர்க்கப்படும் வயதும் அதுவே. ஆனால் கொள்கைப் பற்றும், துடிப்பும் மிகுந்த, இந்த இளைஞர்கள் அவை அனைத்தையும் விட்டு எவ்வசதியும் அற்ற குகையே மேல் எனக் கருதி அங்கு வாழ முற்பட்டார்கள். இளைஞர்கள் ஒரு கொள்கையை ஏற்கும் போது முழுமையாக முழுமனதோடு ஏற்கிறார்கள். அர்ப்பணிப்போடு அதற்காக உழைக்கிறார்கள். அக்கொள்கையின் பாதையில் எதனை அர்ப்பணிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை, என்ற உண்மையை இந்த வசனங்கள் எமக்குச் சொல்கின்றன.
 இளைஞர் இப்றாஹிம் (அலை):
இப்றாஹீம் (அலை) அவர்களின் போராட்ட வாழ்வின் ஒரு கட்டத்தில் அவர்கள் சிலைகளை உடைக்கிறார்கள். அது பற்றி அல்குர்ஆன் கீழ் வருமாறு கூறுகிறது: ஷஷசிலர் கூறினர்: இப்றாஹீம் என்ற பெயருடைய ஓர் இளைஞன் இந்தச் சிலைகள் பற்றிக் கூறுவதை நாம் கேட்டிருந்தோம்|| (அன்பியா:60) இங்கும் இப்றாஹீம் (அலை) என்ற இளைஞன் தனக்கு வரக்கூடிய மிகப் பெரும் அபாயத்தைப் பற்றி எத்தகைய கவலையுமற்று சிலைகளை உடைக்கும் மிக அபாயகரமான பணியில் இறங்குகிறார்கள். உண்மையில் உயிரை இழக்கும் பெருத்த அபாயத்திற்கு அது இட்டுச் செல்கிறது. இளமை இவ்வாறானதுதான். வரப் போகும் எத்தகைய அபாயகரமான விளைவுகளையும் பொருட்படுத்தாது. பெருந்துணிகரக் காரியங்களில் ஈடுபடும். போராட்ட வாழ்வின் போது தேவையான பண்பு இது.
 இஸ்லாமிய வரலாற்றில் இளைஞர்கள்:
இஸ்லாமிய வரலாற்றில் இளைஞர்களின் பங்களிப்பு மகத்தானது. இறைதூதர் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்தே இது ஆரம்பமாகிறது. மக்காவில் இஸ்லாத்தை ஏற்றவர்களில் மிக அதிகமானோர் இளைஞர்கள். மிக முக்கிய கட்டங்களின் போது எவ்வாறு இளைஞர்கள் பங்களிப்பு செய்தார்கள் என்பதை மட்டும் கீழே தருகிறோம். மக்காவில் முஸ்லிம்கள் ஒன்று கூட ஒரு இடம் தேவைப்பட்டது. அப்போது தம் வீட்டைக் கொடுத்துதவியவர் அர்க்கம் இப்னு அபில்அர்க்கம் (ரழி) என்ற 16 வயது மட்டு நிரம்பிய இளைஞரே. மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்ற சந்தர்ப்பத்தில் நிராகரிப்பாளர்கள் இறைதூதர் (ஸல்) அவர்களைக் கொலை செய்ய வீட்டை சூழ்ந்திருந்த போது அவர்களது படுக்கையில் படுத்தவர் அலி (ரழி) என்ற இளைஞரே. அது அவரது மரணப்படுக்கையாகக் கூட அமைந்திருக்க முடியும். அபூபக்கர் (ரழி) அவர்களின் காலப்பிரிவில் அல்குர்ஆனை ஒன்றுதிரட்டும் பாரிய பணியை திறன்பட செய்து முடித்தவர் ஸைத் இப்னு தாபித் (ரழி) என்ற இளைஞரே, உமையாக்களின் காலபப்பிரிவில் மூன்று பெரும் தளங்களில் போராடிய பெரும் தளபதிகள் தாரிக் இப்னு ஜியாத், முஸ்லிம் இப்னு குதைபா முஹம்மத் இப்னு காஸிம் என்பவர்களேயாவர். அவர்களும் சாதித்தார் அப்போது அவருக்கு வயது 24 மட்டுமே. இறுதியில் நவீன காலப்பிரிவுக்கு வந்தால் நவீன இஸ்லாமிய எழுச்சியின் பிதாமகன் எனக் கருதப்படும் இமாம் ஹசன் அல் பன்னா 43 வருடங்கள் மட்டுமே உலகில் வாழ்ந்தார். தனது 25வது வயதிலேயே அல் இஃவான் அல் முஸ்லிமூன் இயக்கத்தைத் தோற்றுவித்தார். இவ்வாறு மிக இளம் வயதிலேயே மிகப் பாரிய இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்டு தனது இளமைக் காலம் முடிய முன்னரே அதனை உறுதி பெற்றதாக ஆக்கிவிட்டு அவர் மரணிக்கிறார். இஸ்லாமி எழுச்சியின் அடுத்த முன்னோடிகளான மௌலானா அபுல் அஃலா மௌதூதியும், ஷஹீத் செய்யத் குதுபும் தமது இளமைப் பருவத்திலேயே இஸ்லாமியப் போராட்டத்தில் கலந்தார்கள். சமூகவியற்கலைகளை இஸ்லாமிய மயப்படுத்தல் என்பதன் முக்கிய முன்னோடிகளில் ஒருவர் ஹாமித் ரபீஃ. அவர் எட்டுத்துறைகளில் கலாநிதிப்பட்டத்தை முடித்துக் கொண்டபோது அவருக்கு வயது 34 மட்டுமே. இவ்வாறு வரலாறு நெடுகிலும் முஸலிம் இளைஞர்கள் மிகப்பெரும் பங்காற்றி இஸ்லாமிய சமூகத்தை நிலைக்கச்செய்து பலப்படுத்தினர். அரண்களாக நின்று காத்தனர். இளமைக்கு இப்படியொரு சக்தியும் ஆற்றலும் உள்ளது, என்பது உண்மை, எனின் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இந்நாட்டிலும் முஸ்லிம் சமூக எழுச்சிக்கு இளைஞர்களால் பாரியதொரு பங்காற்ற முடியும். அவர்களிம் இந்நாட்டு முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கும் பங்களிப்பு என்ன? என்பது இனி நோக்கப்பட வேண்டிய விடயமாகும்.
 இலங்கை முஸ்லிம் சிறுபான்மையும் இளைஞர்களின் பங்களிப்பும்
இலங்கை முஸ்லிம் சமூகம் ஒரு சிறுபான்மை சமூகம். இந்த யதார்த்தத்தை ஒட்டியே முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பும் அமைய வேண்டும். இந்தப்பின்னணியிலிருந்து இப்பிரச்சினை இங்கு நோக்கப்படுகிறது.
முஸ்லிம் சிறுபான்மை என்னும் போது இரு முக்கிய சவால்கள் அவர்கள் முன்நிற்கின்றன:
 1. தனித்துவம் காத்து அடுத்த சமூகங்களுடனும் உறவைப் பேணல்.
 2. அடுத்த சமூகங்களுக்கும் இஸ்லாத்தின் தூதை முன்வைத்தல்.
இவ்விரு சவால்களும் முஸ்லிம் சறுபான்மையின் அடிப்படை சவால்களாகும். இதனை சற்று விளக்கமாக நோக்குவது இளைஞர்களின் பொறுப்பைச் சற்று சரியாக புரிந்து கொள்ள உதவும். பெரும் பான்மையாக முஸ்லிம் வாழும் சமூகத்தில் இஸ்லாமிய அரசு, சமூகம் என்பவற்றை இஸ்லாமிய மயப்படுத்தல் என்பன முதன்மைப்பட்டுக் காணப்படும். அதற்கெதிரான சக்திகளுடனான போராட்டம் அடிப்படையாக அமையும். அந்நிலையில் வேகமான போராட்டப் போக்கு நிறைந்த அரசியல் போராட்டங்கள் அங்கு வலுப்பெற்றிருக்க முடியும். இளமைத்துடிப்புக்கும், வேகத்திற்கும் அங்கு இடமிருக்க முடியும். ஆனால் சிறுபான்மை சமூகத்தில் இஸ்லாமிய அரசு, முழுமையான இஸ்லாமிய சமூக அமைப்பு என்பது மிகத் தூரத்தில் தெரியும் இலக்காகவே இருக்கும். அங்கு சறுபான்மை பெரும்பான்மையில் கலந்து அழியும் அபாயமிருக்கும். நெருக்குதலுக்கும், அநியாயங்களும் உட்படும். இந்நிலையில் முஸ்லிம் இளைஞன் மிகுந்த நிதானம், பொறுமை, கவனமாக திட்டமிடப்பட்ட போராட்ட உபாயங்கள் உத்திகள் கொண்டவனாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. இக்கருத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ள மேலே குறிப்பிட்ட சவால்களை கவனமாக விளங்க முயழ்வோம். முஸ்லிம் சமூகம் தன் தனித்துவத்தைக் காத்துக்கொள்வது என்பது இரு வகைப்படுகிறது.
 அ. கல்வி பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு என்பவற்றில் பலம் பெற்றிருத்தல்.
ஆ. இஸ்லாமிய அறிவுப் பலமும், ஆன்மீகப்பலமும் பெற்றிருத்தல்.
முஸலிம் சமூகத்தின் குறிப்பிட்ட சிறியதொரு வீதத்தினரே இன்று இஸ்லாமிய அறிவைப் பெறுகின்றனர். பெருந்தொகையினர் மிகவும் மேலோட்டமான இஸ்லாமிய அறிவும், மிகவும் பலவீனமான ஆன்மீக நிலையும் கொண்டவர்களாகவே உள்ளனர். இது முஸ்லிம்களின் அதிகமானோர் இஸ்லாமிய ஆளமைச் சிதைவுக்குட்படும் நிலையையும், படிப்படியாக முஸ்லிம் சமூகம் அடுத்த சமூகங்களின் கலாச்சார ஆதிக்கத்திற்கு உட்படும் நிலையையும் ஏற்படுத்துகிறது. ஒரு சமூகத்தின் அழிவு இவ்வாறு தான் நிகழ்கிறது. கல்வி, பொருளாதாரப் பகுதியில் பலம் பெற்றில்லாத போதும் தவிர்க்க முடியாது பலவீனப்பட்டு அடுத்த சமூகங்களுக்கு அடிமைப்பட்டு வாழும் நிலையே ஏற்படும். இலங்கை முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடும் போது கல்வியில் பின்தங்கிய சமூகம் என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. வறுமை முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகப் பரவிப் போய்க் காணப்படுவது சாதாரணமாகவே அவதானிக்கத்தக்கதாகும். வன்முறையால் பாதிக்கப்பட்டும் சுனாமியால் பாதிக்கப்பட்டும் கோடிக்கான சொத்துக்களை அவர்கள் இழந்தமை அவர்களது வறுமை நிழைமையை மேலும் கூட்டிவிட்டது.
 முஸ்லிம் சமூகத்தில் இப்பகுதிகளில் இரு விடயங்களை அவதானிக்க முடிகிறது.
1. மருத்துவம், பொரியியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்று வெளியாவோர் குறிப்பிடத் தக்களவு அதிகரித்துள்ளனர். ஆனால், பொருளாதாரம், அரசியல், சமூகவியல், இலக்கியம் போன்ற சமூகம் சார் கலைகளில் ஈடுபாடு காட்டுவதுவும் அத்துறைகளில் துறைபோகக் கற்பதுவும் மிகக் குறைவு. இதன் காரணமாக சமூக ரீதியான ஆய்வுகள், வழி நடாத்தல்கள், போராட்டங்களை மிகச் சரியாக வழிநடாத்துதல் போன்ற வேலைத்திட்டங்கள் சாத்தியமற்றே செல்கிறது. அத்தோடு முஸ்லிம் சமூகத்தில் துறைபோகக் கற்ற துறைசார் நிபுணர்கள் மிகவும் குறைவு. அப்படியாரும் உருவாகினாலும் அவர்கள் இலங்கையில் இருப்பதில்லை. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு சென்று விடுகின்றனர். இருக்கும் மிகச் சொற்பத் தொகை மூளைசாலிகள் வெளியேற்றம் மிகப்பாரியதொரு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை.
2. வெளிநாடுகளில் தொழில் புரிவோர் முஸ்லிம் சமூகத்தில் அதிகரித்து வருகின்றனர். இவர்களில் மிகப் பெரும் பணக்காரர்களும் உள்ளனர். இவர்களைப் பொருத்தவரையில் இலங்கை, பொருட்கள் வாங்கும் சந்தை மட்டுமே. இவர்களில் பெரும்பாலானோர் நல்ல அறிவுப் பின்னணி அற்றவர்கள் என்பதால் தம் செல்வத்தால் காத்திரமான பணிகள் எதையும் செய்ய அவர்களால் முடிவதில்லை.
முஸ்லிம் சமூகத்தின் அடுத்த பொறுப்பு அடுத்த சமூகங்களுக்கு இஸ்லாத்தை முன்வைத்தல் என்பதாகும். இது செயலூக்கம் மிக்க ஒரு செயற்பாடாக மாற வேண்டுமாயின் 3 ஷர்த்துகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
 1. அடுத்த சமூகங்களின் மொழியில் ஆழ்ந்த புலமை வேண்டும்.
2. அச்சமூகங்களின் சமூக நிலப்பற்றி அழ்ந்த அறிவு அவசியம். அவர்களின் மதம், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவர்கள் மத்தியில் காணப்படும். சிந்தனைப்போக்குகள், அவர்களின் பலம், பலவீனம் போன்ற அவர்களது சமூக நெளிவு, களிவுகள் பற்றிய அழ்ந்த அறிவையே இங்கு குறிப்பிடுகிறோம்.
3. நாகரீக சமநிலை: அதாவது பிரச்சாரம் செய்யும் சமூகத்தின் நாகரீக தரத்தில் அறிவு, வாழ்வுத் தரம், பிரச்சாரத்திற்குட்படும். சமூகத்தின் நாகரீக நிலைக்கு ஓரளவாவது சமனாக இருக்க வேண்டும். ஒரு பின்தங்கிய சமூகத்தின் நாகரீகம், சிந்தனை, மார்க்கம் பற்றி அடுத்த சமூகங்கள் சாதாரண சூழலில் கவனமெடுப்பதில்லை அவர்களின் பின்தங்களுக்கு அவர்கள் ஏற்றிருக்கும் மார்க்கமும், சிந்தனையுமே காரணம் என இயல்பாக அவர்கள் கருதுவர். அடுத்த சமூகங்களுக்கு இஸ்லாத்தை முன்வைக்கும் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் கவனிக்க வேண்டிய இன்னொரு உண்மை அதற்கான உபாயங்களும், குறுகிய, நீண்ட கால இலக்குகளும் யாவை என்பதாகும். இங்கு இது பற்றி விவாதிப்பது நோக்கமன்று. இலங்கை முஸ்லிம் சமூகம் இப்பகுதியில் முதலடியைக் கூட சரியாக எடுத்துவைக்கவில்லை என்பதை உணர்த்தவே இவ்விடயங்கள் இங்கு தரப்பட்டது. முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள சவால்கள் இங்கே சுறுக்கமாக விளக்கப்பட்டன. முஸ்லிம் சமூகத்தின் நிலையும் ஓரளவு இங்கே தரப்பட்டது. இப்போது இந்த சமூகத்தைப் பொருத்தவரையில் முஸ்லிம் இளைஞர்கள் என்ன பணியாற்ற வேண்டியுள்ளது என்பது தெளிவாக விளங்கும்.
 நாம் ஒரு சிறுபான்மை இனத்தின் இளைஞர்கள்…
கல்வி, பொருளாதாரம், என்ற பல்வேறு துறைகளிலும் மிகவும் பலவீனப்பட்டுப் போன சமூகத்தின் இளைஞர்கள். இஸ்லாமிய அறிவும், பயிற்சியும் பரவலாக கொடுக்கப்படாததன் காரணமாக நிறைய ஆளமைச் சிதைவையும், தனித்துவ இழப்புக்களையும் கொண்டுள்ள சமூகத்தின் இளைஞர்கள் நாம்… அடுத்த சமூகத்திற்கு தூதை எத்திவைத்தல் எப்படிப் போனாலும் தாமாக விரும்பி இஸ்லாத்தில் நுழைந்தோரை பயிற்றுவிக்கக்கூட முறையான, போதிய வசதிகள் கொண்ட நிறுவனங்களை உருவாக்கிக் கொள்ளக் கூடச் சக்தியற்ற சமூகம் நாம். போராடியவர்கள் வேறு இரு சமூகம். ஆனால் வடக்கின் மிகப் பெரியதொரு பிரதேசத்தை இழந்தவர்கள் நாம். அப்பிரதேசத்தில் மீள் குடியேற எந்தக் காத்திரமான செயற்பாடுகளிலும் இறங்காது இன்னமும் அகதிகளாகவும், சக்தி படைத்தவர்கள் இப்பகுதிகளிலேயே தோட்டங்கள், வீடுகள் வாங்கி நிரந்தரமாகத் தங்கி வாழவும் முனைகிறோம். எவ்வளவு பாரிய அவல நிலை இது. அங்கு மட்டுமா நிலமிழந்தோம், சொத்துக்களை இழந்தோம் கிழக்கிலும் பல இடங்கள் இப்படிப்பல அவலங்கள் நிறைந்த சமூகம் நாம்… அத்தோடு சேர்த்து நாம் அரசியல் அநாதைகள்… இது தான் எம் சமூகம் பற்றிய சுருக்கம். இப்போது இந்த சமூகத்தின் இளைஞர்கள் பங்களிப்பு என்ன? இந்த சமூகத்தையே மீள் எழுப்பும், மீள் புணரமைக்கும் பணி அவர்களுக்குரியது. பிரச்சினைகளை உணர்ச்சி பூர்வமாக ஏற்கும் மன நிலையும், அச்சவால்களை ஏற்றுப் போராடும் துடிப்பும், வேகமும் கொண்டவர்கள் இளைஞர்களே. எனவே அவர்களே இப்பங்காற்ற வரலாற்றால் அழைக்கப்படுகிறார்கள்.
இங்கு அவர்கள் கருத்திற் கொள்ள வேண்டியவை கீழ்வருவனவையாகும்.
இது ஒரு சமூகத்தின் மீள் புணரமைப்புக்கான, விடிவுக்கான போராட்டம் ஓட்டைகளை சீர் செய்யும் சாதாரண சீர்திருத்த முயற்சியல்ல. இது முஸ்லிம் சமூகம், எனவே இஸ்லாமிய பார்வையின் ஊடாகவே இம்முயற்சி கொண்டுசெல்லப்பட வேண்டும். எனவே இஸ்லாத்தை தெளிவாகவும், ஆழ்ந்தும் படித்த ஒரு இளைஞர் கூட்டம் தேவை இஸ்லாம் பற்றிய வெறும் மேலோட்டமான அறிவு கொண்டோர் சமூகத்தின் புணரமைப்பாளர்களாக ஒரு போதும் இருக்க முடியாது. ஒரு சமூகத்தையும் அதன், பிரச்சினைகளையும், அதன் நெளிவு சுளிவுகளையும் புரிந்து கொள்ள சமூகவியல் கலைகளில் நிபுணத்துவம் தேவை. அத்தகைய அறிவுப்பின்னணியையும் இவ்விளைஞர் பிரிவினர் கொண்டிருக்க வேண்டும். இது சிறுபாண்மை சமூகம் எம்மைச் சூழ இருப்பவை பெரும்பான்மை சமூகங்கள். எனவே போராட்டத்தில் ஓரளவு நிதானமும், பொருமையும், கவனமும், தேவை வித்தியாசமான உபாயங்களும், உத்திகளும் அவசியம். பெரும் பான்மை முஸ்லிம் சமூகத்தை விட்டு வாழ்வு முறையாலும், எதிர்கொள்ளும் பிரச்சினைகளாலும், சவால்களாலும் நாம் வேறுபடுகிறோம். எனவே போராட்ட பழிமுறைபற்றிய தனியான கொள்கைகளும் சித்தாந்தங்களும் எம்மிடம் இருக்க வேண்டும். சிறுபான்மை கல்வி, பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தியின் போது தன்னில் தங்கியிருப்பது தவிர்க்க முடியாதது. அரசோடு போராடியே அவற்றை பெறவேண்டும். என்ற ஒற்றைப்போராட்ட ஒழுங்குமுறை காணப்படக் கூடாது. ஏனெனில் பெரும்பான்மை அரசு மிகப் பெரும்பாலும் சிறுபான்மைக்கான எல்லா வசதிகளையும், உரிமைகளையும் தரும் என ஒருபோதும் உதிர்பார்க்கமுடியாது. எனவே அந்த வகையில் அமையும் போராட்டம் சிறுபான்மையின் சக்தி அழிவுக்கும், உண்மையான சமூகப் புணரமைப்புக்கான போராட்டத்தை விட்டு வெகுதூரம் கொண்டு செல்லவுமே உதவும். இந்த வகையில் சுயதன்னிறைவுக்கான வழிமுறைகள் பற்றி சிந்தித்தல் மிக அவசியமானது. மாற்றம் என்பது பல கட்டங்களைத் தாண்டிச் செல்லக் கூடும். பல தலைமுறைகளை அது எடுத்துவிடலாம். ஆய்வாளர்கள் கீழ்வருமாறு இதனைப் பிரிக்கிறார்கள்.
 தலைமுறை ஒன்று :
கோளாறுகளையும் குறைகளையும், பிரச்சினைகளையும் இனங்கண்டு சமூகத்திற்கு அதனை உணர்த்துதல், தம் பாரிய வீழ்ச்சி நிலை பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்துதல்.சமூகத்தின் வீழ்ச்சி நிலை கண்டு, அதனை விழிப்புறச் செய்வதுவே ஒரு பாரிய வேளைத் திட்டம். அது சில போது ஒரு தலைமறையையே எடத்து விடக்கூடும். இவ்வாறு ஒரு சமூகத்தின் புணரமைப்புக்கு ஐந்து தலைமுறைகள் சென்று விடக்கூடும். அதாவது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்தை இது எடுத்து விட முடியும். சமூக நிலை பொறுத்து இக்காலப்பிரிவு கூடவோ குறைந்து விடவோ செய்யலாம்.
தலைமுறை இரண்டு :
நம்பிக்கை, உள நிலைசார் சீர்கேடுகளை சீர்படுத்தல். நம்பிக்கைப் பகுதியில் தோன்றும் குறைநிறைகள் பாரதூரமானவை. அவை சமூகத்தை முஸ்லிம் சமூகம் என்ற நிலையை விட்டே அகற்றி விடக் கூடியவை. சரியான நம்பிக்கையின் முதல் முதல் விளைவு  உளப்பரிபக்குவம். ஆன்மீகப் பலம் ஒரு சமூகம் சீர்படலுக்கும் தனித்தன்மை காக்கப்படவும் உறுதியுடன் போராடவும் ஆன்மீகம் ஆற்றும் பங்கு மகத்தானது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்நிலையை சீர்செய்ய ஒரு தலைமுறை சென்று விடல் இயல்பு.
தலைமுறை மூன்று :
சமூகத்தில் கலாச்சார, பொருளாதார, அரசியல் கட்டமைப்புக்கான கொள்கை முன்வைத்தல்.
தலைமுறை நான்கு :
முழமையாகச் சமூகத்தைக் கட்டமைத்தல்.
 தலைமுறை ஐந்து :
விளைவுகள் காணல்.
இவ்வாறு ஒரு சமூகத்தின் புணரமைப்புக்கு ஐந்து தலைமுறைகள் சென்று விடக்கூடும். அதாவது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்தை இது எடுத்து விட முடியும். சமூக நிலை பொறுத்து இக்காலப்பிரிவு கூடவோ குறைந்து விடவோ செய்யலாம். இறுதியில் ஓர் அம்சத்தை குறிப்பிட விரும்புகிறோம். மாற்றம் பற்றி சிந்திக்கையில் கவனத்தில் கொள்ளவேண்டிய அதிமுக்கிய விடயம் சமூகத்தின் அக நிலையாகும். அங்கு பழக்கங்களாகவும், வழக்குகளாகவும், மாறிவிட்ட பல பிழையான அம்சங்களுள்ளன. பிழையான வேறு சில நிறுவனங்கள் எம் வாழ்வில் நிலைத்து வேரூன்றியும் விட்டன. இவற்றுக்கெதிரான அகப் போராட்டம் மிகப் பெரியது, மிகவும் கடினமானது. இது இளைஞர்களின் பங்களிப்பு பற்றி முன்வைக்கப்பட்ட சிந்தனை. இதன் ஒவ்வொரு பகுதியும் விரிந்த விளக்கங்களை வேண்டி நிற்பனவாகும். கட்டுரை மிக நீண்டு விடும். தலைப்பை விட்டு வெளியே சென்று விடவும் கூடும் என்பதால் ஓரளவு சுருக்கி அமைத்தோம்.
 உசாத்துணைகள்
 1. தவ்ர் அஸ்ஸபாப் அல் முஸ்லிம் – மௌலானா மௌதூதி
 2. அத்தரீகு மின் ஹூனா – அஷ்ஷெய்க் : அல் கஸ்ஸாலி
 3. பிக்ஹ் அல் அக்கல்லிய்யாத் அல் முஸ்லிமா – கலாநிதி யூஸுப் அல் கர்லாவி
 4. முஹம்மாத்துன் பீ அல்பஹ்ஸ் அல்ஹலாரி – கலாநிதி செய்யித் துஸ்கி அல்ஹஸன்
 5. நல்ராத்துன் ஹலாரிய்யதுன் பீ அல் கிஷஸ் அல்குர்ஆனி – கலாநிதி செய்யத் துஸ்கி அல்ஹஸன்
 6. அல் தன்னியா அல்இஜ்திமாஈயா – கலாநிதி ஆதில் ஹுஸைன்
 7. பீழிலாலில் குர்ஆன் – செய்யித் குத்ப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.