வியாழன், 20 டிசம்பர், 2012

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா? - 3


பிற்கால நாயக்க, மராட்டிய மன்னர்கள் காலத்தில் இஸ்லாமியக் கோயில்களைப் பராமரிப்பதற்கு உரிமை இருந்திருக்கிறது. பல இஸ்லாமியர் இந்து மன்னர்களின் படைத் தலைவர்களாகக் கூட  இருந்திருக்கிறார்களே!

உண்மைதான். நான் முன்பே குறிப்பிட்டபடி இவை எல்லாமே அரசியல் நோக்கில் செய்யப்பட்டவைதான். முஸ்லிம் மன்னர்களின் காலத்திலும் இந்துக் கோயில்கள் பராமரிக்கப்பட்டதால் இன்றளவும் பழமையான இந்துக் கோயில்கள் நாடெங்கும் உள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள். ரஜபுத்திரர், பார்ப்பனர் போன்ற இந்துமத ஆதிக்கச் சக்திகள் முஸ்லிம் மன்னர்களிடம் உயரதிகாரிகளாக இருந்துள்ளனர். அக்பரிடம் அதிகாரியாக இருந்த ராஜா மான்சிங் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். முகம்மது பின் துக்ளக் காலத்தில் அலிஷா நாது என்கிற இஸ்லாமிய குறுநிலத் தலைவன் தனக்குட்பட்ட பகுதியில் கொடுமைகள் செய்வதாகப் பரான் என்ற இந்து நிலப்பிரபு முறையிட, அந்தப் பகுதி நாதுவிடமிருந்து பறிக்கப்பட்டு பரானிடம் வழங்கப்பட்டது. இதற்காக நாது சகோதரர்கள் துக்ளக்கை எதிர்த்துக் கலகம் செய்தனர். அயோத்தியிலுள்ள அனுமான் கர்த்திக் கோயில் தொடர்பாகச் ‘சுன்னி’ முஸ்லிம்களுக்கும் இந்துச் சாதுக்களுக்குமிடையே பிரச்சினை வந்தபோது டில்லி மன்னர் வாஜித் அலிஷா இந்துக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார். இது தொடர்பாக அலிஷா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் உள்ளன.  

பழைய சங்கதிகள் கிடக்கட்டும். சமீபத்திய வரலாற்றுக்கு வருவோம். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சிதானே காரணம்?


நாடு என்றால் என்ன, நாட்டுப் பற்று என்பதெல்லாம் எவ்வாறு மக்கள் மத்தியல் உருவாக்கப்படுகிறது, இந்தியா என்றொரு நாடு ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இருந்ததுண்டா, எந்த ஒரு பகுதி மக்களும் தாங்கள் பிரிந்து போய்ச் சுதந்திரமாக வாழ வேண்டும் என விரும்பினால் அதனை நிறைவேற்றுவதுதானே நியாயம் என்பன போன்ற கேள்விகளிலிருந்து தொடங்கி மிகவும் விரிவாகப் பேசப்பட வேண்டிய விசயம் இது. விரிவாகப் பேசுவதற்கு இங்கே அவகாசமில்லாததால் நேரடியாக நீங்கள் கேட்டதற்கு வருவோம். ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கெதிராகத் தொடக்க காலத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்தே போராடினர். குறிப்பாக 1857 முதல் சுதந்திரப் போரில்  முஸ்லிம் மன்னர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. அகில இந்தியத் தேசிய உணர்வு என்பதை முதற்கட்ட இந்துத் தலைவர்கள் உருவாக்கியபோது ஆங்கில ஆட்சியின் ‘புதிய இழிவு’களுக்கெதிராக இந்தியப் பழமையை அவர்கள் உயர்த்திப் பிடித்தனர். இந்தியப் பழமை என்பதை இந்துப் பழமையாகவே முன் வைத்த இவர்கள் இந்த அடிப்படையில்  ஆரிய சமாஜம், வருணாசிரம சபை, இந்து மகாசபை போன்ற புத்துயிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கினர். இன்றைய ‘இந்துத்துவம்’, ‘இந்து ராஷ்டிரம்’ ஆகிய கருத்தாக்கங்கள் முதன் முதலில் முன வைக்கப்பட்டது இந்துமகாசபையில்தான் என்பது இன்று அவர்களே ஏற்றுக்கொள்ளும் உண்மை. சாவர்கர், பாய் பரமானந்தர் போன்றவர்களால் தலைமை தாங்கப்பட்டு இயங்கிய இவ்வமைப்பு இந்துக்கள் மத்தியில் முக்கியமான கருத்தியல் சக்தியாக விளங்கியது. குறிப்பாகக் காந்தியின் வருகைக்கு முன்பு இதன் பங்கு குறிப்பிடத்தக்கது.


1933ல் இந்து மகாசபையின் தலைவராக இருந்த பாய் பரமானந்தர் பிரிவினைக்கு முறபட்ட இந்தியாவை மத அடிப்படையில் இரு நாடுகளாகப் பிரிக்க வேண்டும் என முதன் முதலில் சொன்னவர்களில் ஒருவர். இப்போதுள்ள பாகிஸ்தான் பகுதியைச் சிந்துவிற்கு அப்பாற்பட்ட ஆப்£கானிஸ்தான் முதலியவற்றோடு இணைத்து “ஒரு மாபெரும் முஸல்மான் பேரரசு உருவாக்கப்பட வேண்டும். அங்குள்ள இந்துக்கள் இங்கே வந்துவிட வேண்டும். இங்குள்ள முஸ்லிம்கள்  அங்கே போய்விடவேண்டும்” என்றார்.  1905ம் ஆண்டு வாக்கிலேயே தனக்கு இக்கருத்து தோன்றியது எனவும் அவர் கூறினார். பின்னர் 1937ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற இந்து மகாசபை மாநாட்டில் அப்போது தலைவராக இருந்த சாவர்கர், “இந்தியாவை ஒற்றைத் தேசமாகக் கருத முடியாது. முக்கியமாக இரண்டு தேசங்கள் இந்தியாவிற்குள் உள்ளன. ஒன்று இந்துக்களின் தேசம்; மற்றது முஸ்லிம்களின் தேசம்” என்றார். இங்கொன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். முஸ்லிம்களுக்குத்  தனி நாடு வேண்டுமென்ற கோரிக்கை முஸ்லிம் லீக்கால் முதன் முதலில் எப்போது வைக்கப்பட்டது தெரியுமா? 1940ம் ஆண்டு லாகூர் மாநாட்டில்தான். அதற்கு முன்பே இந்து மகாசபை இந்தக் கோரிக்கையை வைத்துவிட்டது என்பதுதான் உண்மை. நாட்டுப்பிரிவினை பற்றிப் பேச சர்வ கட்சி மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. அதில் ஜின்னா மூன்று கோரிக்கைகளை வைத்தார். 1. மத்திய சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒன்று பிரதிநிதித்துவம், 2. பஞ்சாப் மற்றும் வங்கத்தில் முஸ்லிம் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம், 3. சிந்து, பலூசிஸ்தான் மற்றும் வடமேற்கு எல்லை மாகாணம் எனப் புதிய மூன்று முஸ்லிம் பெரும்பான்மை மாகாணங்களை உருவாக்குதல். இவை அனைத்தும் முற்றிலும் நியாயமான கோரிக்கைகள். அன்றைய முஸ்லிம் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கோரினார் ஜின்னா. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் இதை ஏற்றுக் கொண்டனர். தேஜ் பகதூர் சப்ரு போன்றவர்கள் இதை அம்மாநாட்டிலேயே ஆதரித்துப் பேசினர்.மாநாட்டில் பங்கு பெற்ற இந்து மகாசபைத் தலைவர்கள் இதற்கு எதிராகப் பேசி ஒரு முடிவுக்கு வராமல் மநாட்டைக் கலைத்தனர். அதன் பிறகு ஜின்னா தனிநாடு கோரிக்கையை முன்வைத்தார். “ஜின்னாவின் திட்டம் அறிவு ததும்பும் திட்டம்” எனப் பாராட்டினார் பெரியார் ஈ.வெ.ரா.

தொடரும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.