புதன், 26 டிசம்பர், 2012

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா? - 4


தாங்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டைப் பிரிக்க வேண்டுமென்று இந்துககள் சொன்னார்களா? நம்ப முடியவில்லையே! அவர்களுக்கு இதில் என்ன லாபம்?


இந்துக்கள் சொன்னார்கள் என்று நான் சொல்லவில்லை. இந்து மகாசபைத் தலைவர்கள் சொன்னார்கள். சாதாரண மனிதனுக்கு, தான் ஒரு இந்து என்ற உணர்வே கிடையாது. அவனுக்கு ஏதாவது உணர்வு இருக்கிறதென்றால் சாதி உணர்வு வேண்டுமானால் இருக்கலாம். உயர்சாதி இந்து ஆதிக்கச் சக்திகள் வெள்ளையரிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பறித்துத் தாங்கள் வைத்துக் கொள்ள விரும்பியபோது சாதிகளாய்ப் பிளவுண்டிருந்த மக்களை ‘இந்துக்கள்’ என்ற பெயரில் ஒன்றிணைக்க வேண்டியிருந்தது. எனவே முஸ்லிம்கள் என்றொரு ‘எதிரி’யைக் காட்டித் தங்களிடமிருந்து அந்நியமாகியிருந்த தாழ்ந்த சாதி மக்களைத் தங்களோடு இணைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் உயர்சாதியினருக்கு இருந்தது. 
இன்னொன்றையும் நீங்கள் வரலாற்று ரீதியாய்ப் புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலேயரின் வருகையோடு தேர்தல் அரசியலும், மக்கள் தொகைக் கணக்கீடும் (1891) இங்கே நுழைந்தது. இந்தக் கணக்கீட்டில் முஸ்லிம், கிறிஸ்தவர், சாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்டவர் எனத் தனித் தனியே விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சூழலில் பாகிஸ்தான் இந்தியாவோடு இணைந்திருந்தால் முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை இந்துக்களின் எண்ணிக்கையை விட அதிகமாய்ப் போய், தேர்தல் அரசியலில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் ஆபத்திருந்ததை இந்துத் தலைவர்கள் உணர்ந்தனர். இந்நிலையை எதிர்கொள்ள அவர்கள் இரண்டு வழிகளை மேற்கொண்டனர். ஒன்று : தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துககளாகக் கருத வேண்டும் என்கிற கருத்தைப் பரப்புவது. 1934 பிப்ரவரியில் அலகாபாத்தில் கூட்டப்பட்ட இந்து மகாசபையின் சிறப்புக் கூட்டமொன்றில் இக்கருத்து விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துககளாகக் கருத வேண்டும் என்ற கருத்தை ஆர்ய சமாஜிகளும் இதர சனாதனிகளும் எதிர்த்தனர். எனினும் அரசியல் லாபம் கருதித் தலைவர்கள் இக்கருத்தை வலியுறுத்தினர். இறுதியாக, தாழ்த்தப்பட்டவர்களுக்கு பொதுக்கிணற்றில் நீர் இறைக்கும் உரிமை போன்றவற்றை மறுக்கக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய இந்து மகாசபை, “இருந்தாலும் அவர்கள் ‘யஞ்ஞோபவீதம்’ (பூணூல்) அணியக்கூடாது” என அறிவித்தது. இரண்டு: முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளைப் பிரித்து தனி நாடாக்கிவிட்டால் எஞ்சிய பகுதியில் ‘இந்து ராஜ்யம்’ அமைத்து அதில் தாங்கள் ஆட்சி செலுத்த முடியும் என உயர்சாதி இந்துக்கள் நினைத்தனர்.உண்மைஇப்படி இருக்க நாட்டுப் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் மட்டுமே காரணம் எனச் சொல்வது அபத்தம்.

 

அப்படியானால் நாட்டுப் பிரிவினையில் முஸ்லிம்கள்ளுக்குப் பங்கே இல்லை என்கிறீர்களா?


இந்துக்களுக்குத் தனியாக ஒரு நாடு என்றால் அதில் தாங்கள் தலைமை ஏற்க முடியும் என இந்து ஆதிக்கச் சக்திகள் நினைத்தது போலவே முஸ்லிம்களுக்குத் தனிநாடு என்றால் தாங்கள் ஆதிக்கம் செலுத்த முடீயும் என முஸ்லிம் மேல்தட்டினரும், முஸ்லிம் லீக் தலைவர்களும் நினைத்தனர். ஆனால் அடிப்படையில் ஒவ்வொரு முஸ்லிமும் பிரிவினைவாதி என்றோ, முஸ்லிம் மதத் தலைவர்கள் (உலமாக்கள்) பிரிவினை வாதத்தை முன் வைத்து முஸ்லிம்களைத் தங்களின் கீழ்த் திரட்டினர் என்றோ கருத வேண்டியதில்லை. ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்ற மன்னர்கள் வெள்ளையராட்சியை எதிர்த்துக் கடுமையாகப் போராடியதை முன்பே குறிப்பிட்டேன். 1857 சுதந்திரப் போர் பற்றிய நாட்டுப்புறப் பாடல்களில் மவுல்விகளான அகமதுல்லாஷா, இனாயத் அலி போன்றோர் நானாசாகேப், ஜான்சிராணி ஆகியோரோடு இணையாகப் போற்றப்படுகின்றனர். 1885ல் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது சர் சையத் போன்ற இஸ்லாமிய மேல்தட்டினர் காங்கிரசில் சேர வேண்டாம், ஆங்கிலேய ஆட்சிக்குச் சார்பாக இருந்து முஸ்லிம்களுக்குச் சலுகைகள் பெறுவதுதான் முக்கியம் எனக் கூறியபோது முஸ்லிம் மதத்தலைவர்களான மவுலானா ரஷீத் அலி காங்கோய் போன்றோர், “காங்கிரசில் சேர்ந்து இந்துச் சகோதரர்களுடன் போராடுங்கள்” என முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தனர். இந்தத் தன்மை கடைசிவரை தொடர்ந்தது. ஜின்னா போன்ற அரசியலை முதன்மையாகக் கொண்ட சக்திகள் காங்கிரசுக்கு மாற்றாக இருந்து பிரிவினையை ஆதரிப்பது என்பதும் மவுலானா அபுல் கலாம் ஆசாத் போன்ற மதப் பற்றாளர்கள் தொடர்ந்து காங்கிரசில் இருந்து அதனை எதிர்ப்பது என்பதும் தொடர்ந்தது. மத அடிப்படையிலும் உலமாக்கள் நாட்டு ஒற்றுமைக்கு ஆதரவு காட்டினர். கூட்டுத் தேசியத்திற்கு இஸ்லாம் எதிரானதல்ல. முகம்மது நபி அவர்களே மதினாவிற்குச் சென்றவுடன் பிற மதத்தினருடன் கூட்டுத் தேசியத்தை வலியுறுத்தினார். ஜமாத் லைவராக இருந்த மவுலானா உசேன் அகமத் மதானி, “தேசம் (குவாம்) என்பது நில எல்லைத் தொடர்பான கருத்தாக்கம். ‘உம்மாஹ்’ அல்லது ‘மிலாத்’ என்பது மதம் தொடர்பான கருத்தாக்கம். இரண்டையும் குழப்ப வேண்டியதில்லை. ஒருநில எல்லைக்குள் இரு மதத்தினர் இணைந்து வாழ்வதென்பது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானதல்ல” என்றார்.


சர் சையத் போன்ற மேல்தட்டினர் காங்கிரசுக்கு எதிராக வெள்ளையருக்கு ஆதரவளித்தனர் என்று சொன்னீர்கள். இது இழிவில்லையா?


சர் சையத் செய்தது சரி என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இந்து மத ஆதிக்கச் சக்திகளுக்கெதிராக வெவ்வேறு குழுவினர் தங்களின் உரிமைகளைப் பெற வேண்டி, காங்கிரசை எதிர்த்தனர் என்பது சர் சையத் போன்றோர் மட்டும் செய்த காரியமல்ல. பல பிரிவினரும் இதைச் செய்துள்ளனர். நமது நீதிக்கட்சி, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரும் கூட இந்நிலை எடுக்க நேர்ந்ததை நாம் மறந்துவிடக் கூடாது நான் சொல்ல வருவது இதுதான். ஒன்று: ஆதிக்கச் சக்திகள் அவர்கள் – முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, இந்துக்களாக இருந்தாலும் சரி – தங்களின் நலன் நோக்கில்தான் செயல்படுகின்றன. முஸ்லிம்களை மட்டும் சுட்டிக்காட்டி எதிர்ப்பது அபத்தம். இரண்டு: முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றைக் கருத்துடையவர்கள், ஒரே மாதிரி செயல்படுபவர்கள், ஒரே மாதிரி வாக்களிப்பவர்கள் என்பதெல்லாம்கூட அவர்கள் பற்றிச் சொல்லக்கூடிய கட்டுக் கதைகளில் ஒன்றுதான். முஸ்லிம்களுக்குள்ளும் பல்வேறு போக்குகள் இருந்தன. அரசியல் சக்திகளது கருத்தும் மதத் தலைவர்களது கருத்தும் எல்லாக் காலங்களிலும் ஒத்துப்போனதில்லை. பலரும் நினைப்பது போல முஸ்லிம் மதத் தலைவர்களும் முஸ்லிம் மக்களும் பிரிவினைவாதிகள் இல்லை. தவிரவும் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த முஸ்லிம் சமூகத்தை நவீனப்படுத்துவது, புதிய ஆங்கிலக் கல்வியை அவர்களுக்கு அறிமுகம் செய்வது, புதிய பல்கலைக் கழகம் ஒன்றை உருவாக்குவது என்றெல்லாம் சையத் போன்றவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை வெறும் ஆங்கில ஆதரவு நடவடிக்கையாகப் பார்த்துவிட முடியாது.

இந்திய வரலாறு எழுதப்பட்டதே இந்து வகுப்புவாதச் சார்போடுதான் என்பது போலச் சொன்னீர்கள். வரலாறு என்பது பழைய சம்பவங்களைத் தொகுத்துச் சொல்வதுதானே? இது எப்படி ஒரு பக்கச் சார்பாக இருக்க முடியும்?



வரலாறு என்பது ஒருவகையான ‘கதை சொல்லல்’தான். ஒரு சம்பவத்தைக் கண்ணால் பார்த்த இருவர் தனித்தனியே அதை விவரிக்கும் போது இருவேறு கதைகள் உருவாகிவிடுகின்றன என்பதை நாம் அனுபவத்தில் உணர்கிறோம். வரலாறும் அப்படித்தான் சம்பவங்கள் ஒன்றாக இருந்த போதிலும் சொல்பவரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப அவற்றில் ஒரு சில தேர்ந்தெடுக்கப்படும்போது வெவ்வேறு வரலாறுகள் தோன்றிவிடுகின்றன. தொடக்கக் காலத்தில் இந்திய வரலாற்றை எழுதியவர்கள் ஜேம்ஸ்மில் போன்ற வெள்ளையர்கள்தான். பிரித்தாளும் சூழ்ச்சி என்பது அவர்களின் அரசியல் கொள்கை. எனவே இந்திய வரலாற்றைக் காலப்பாகுபாடு செய்யும்போது ‘இந்து இந்¤தியா’, ‘முஸ்லிம் இந்தியா’, ‘பிரிட்டிஷ் இந்தியா’ எனப் பகுத்தனர். எனவே இந்து இந்தியா படையெடுப்பால் முஸ்லிம் இந்தியாவாக்கப்பட்டது என்பதும் வெள்ளையராட்சியில் இது நவீன வளர்ச்சியைப் பெற்றது என்பதும்இதன் மூலம் பொருளாகிறது. ஆனால் நவீன வரலாற்றறிஞர்கள் இந்திய வரலாற்றை இப்படி மத அடிப்படையில் பகுப்பது தவறு என்கின்றனர். பண்டைய இந்தியா, இடைக்கால இந்தியா, நவீன இந்தியா எனப் பிரிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். நேரு கூட இப்படித்தான் பகுத்துள்ளனர். 
வெள்ளையர் எழுதிய வரலாற்றுக்கு எதிராக இந்தியத் தேசியவாதிகள் வரலாறு எழுதியபோது ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் பழம் பெருமையைத் தூக்கிப் பிடித்தனர். உணர்வு ரீதியாய் இந்தியத் தேசியத்தைக் கட்டமைக்க முயன்ற உயர்சாதி இந்துக்கள் பண்டைய ‘இந்து’ இந்தியாவை இலட்சியமாக முன் வைத்தனர். இந்தச் செயற்பாடுதான் முஸ்லிம்கள் பற்றிய பல்வேறு விதமான வரலாற்றுப் பொய்களுக்கும் காரணமாகியுள்ளன. பெரும்பாலும் உயர்சாதியினரே ஆதிக்கம் செலுத்தும் கல்வித்துறை, பத்திரிகை, தொலைக்காட்சி முதலியவற்றில் இந்நிலை தொடர்கிறது. இதனால் சாதாரண மக்கள் மத்தியிலும் இப்பொய்கள் ஆழப்பதிந்துள்ளன. இருந்தபோதிலும் பல சனநாயகச் சிந்தனையுடைய வரலாற்றாசிரியர்களும், இடதுசாரிச் சிந்தனையாளர்களும் இத்தகைய வரலாற்றுப் பொய்களைத் தோலுரிக்கும் முயற்சிகளையும் செய்தே வந்திருக்கின்றனர். பாபர் மசூதிப் பிரச்சினையில் கூட இந்து மத வெறியர்கள் வரலாற்றைப் புரட்ட முயற்சித்த போதெல்லாம் இந்தப் புரட்டல் வேலைகளுக்கெதிரான இவர்களின் முயற்சிகள் பாராட்டும்படியாக இருந்தன. இன்று இந்துத்துவவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் செய்த முதல் வேலைகளில் ஒன்று வரலாற்றைத் திருத்தியதுதான். பழைய பாடநூற்களை நீக்கிவிட்டு சி.பி.எஸ்.சி என்கிற மத்திய உயர் கல்வி நிறுவனம் இப்போது ஏழு புதிய வரலாற்றுப் பாடநூற்களை வெளியிட்டுள்ளது. இதில் மதச்சார்பற்ற கருத்துக்கள் பல நீக்கப்பட்டு, முஸ்லிம்கள் மீது வெறுப்பைத் தூண்டும் பல கருத்துகள் இணைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தப் போகிற முயற்சி இது.
தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.