வெள்ளி, 11 மே, 2012

வட்டி!


ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்
உழைப்பை உறிஞ்சும் அட்டை பூச்சிகள் பெருகி வருகுதே..
வட்டி எனும் கொடிய தீயும் நாட்டில் பற்றி எரியுதே..
உழைப்பில்லா வட்டி வயிறு கொழுத்து பெருக்குதே..
உழைக்கும் வர்க்கம் வட்டி கொடுத்து விழியும்
பிதுங்குதே..
விஷம் போல நாடெங்கும் பரவி வருதே மீட்டர் வட்டி..
விட்டு மீளமுடியாமல் தவிக்கின்றனரே இதை தினமும் கட்டி..
குட்டிபோட்டு வட்டியும் தான் விரைந்து வளருதே..
ஈடுகொடுக்க முடியா ஏழை உயிர் மரணம் தழுவுதே..
வட்டி வாங்குவோரின் அவல நிலையை அறிந்திடுங்கள்..
மார்க்க போதனைகளுக்கு நீங்கள் செவி சாய்த்திடுங்கள்..
நெருப்பை யாரும் உண்பதற்கு விளைவீரோ?
வட்டியும் நெருப்பை போன்றது என்று அறிவீரோ?
வட்டியும் வியாபாரம் போன்றதே என்று வாதிடுவாரே இம்மையிலே..
ஷைத்தானால் பீடிக்கப்பட்ட பைத்தியமாய் எழும்பிடுவாரே மறுமையிலே..
வட்டி வாங்கி உண்பவருக்கும்..
வட்டி கொடுத்து வாழ்வோருக்கும்;..
அதை கணக்கு எழுதி கவனிப்போருக்கும்..
அதற்கு சான்று பகர்வோர்க்கும்..
குற்றத்தில் சரிபங்கு உள்ளதே..
தண்டனை அனைவர்க்கும் பொதுவே..
வட்டியினால் ஈட்டிய பொருளுக்கும்..
வட்டி வாங்கி உண்போருக்கும்..
இறைவனின் நேசம் கிடைப்பதில்லை..
அப்பொருளும் அபிவிருத்தி அடைவதில்லை..
வட்டி வாங்கி உண்பதென்பது..
தன் தாயோடு புணர்வதற்கு ஒப்பான செயலாகும்..
நமை நிரந்தர நரகிற்கு இட்டுசெல்லும் வழியாகும்..
இக்கடுமையான எச்சரிக்கை அறிவீரோ?
சிந்தித்து தெளிவு பெற்று மீள்வீரோ?
வட்டியை விட்டு விலகி நீங்கள் வந்திடுங்கள்..
இல்லையெனில்..
இறைவனும்..அவனின் தூதரும் உம்மை சபித்திடுவரே..
உமக்கு எதிராய் போர் பிரகடணம் செய்திடுவரே..
வட்டி ஒரு பெரும் பாவம் என்பதை நாமும் அறிந்திடுவோமே..
மறுமையில் நெருப்பு கற்களை விழுங்காமல் நமை காத்திடுவோமே..
மார்க்கம் காட்டிய வழியில் நாமும் நடந்திடுவோமே..
வட்டி எனும் கொடிய அரக்கனை வீழ்த்திடுவோமே..
அழகியகடன் எனும் வட்டியில்லா உதவி அளித்திடுவோமே..
ஏழைகள் வாழ்வில் ஒளியை நாமும் ஏற்றிடுவோமே..
ஜக்காத் எனும் ஏழை வரியை தவறாமல் வழங்கிடுவோமே..
அழகியகடன் வாய்ப்பினை மேலும் நாம் பெருக்கிடுவோமே..
மார்க்கத்தில் என்றும் உறுதியாக நிலைத்திடுவோமே..
மாறா உண்மை முஃமின்களாக வாழ்ந்திடுவோமே..
ஈமானை மென்மேலும் உறுதியாக்கிடுவோமே..
ஈருலக வெற்றியை நாமும் பெற்றிடுவோமே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.