சனி, 28 ஏப்ரல், 2012

எகிப்து அதிபர் தேர்தல்:13 பேர் வேட்பாளர்கள் – ஷஃபீக் போட்டியிடுகிறார்!

Egypt presidential race narrowed to 13 candidates

கெய்ரோ:முபாரக்கின் ஆட்சி காலத்தில் பிரதமராக பதவி வகித்த அஹ்மத் ஷஃபீக் உள்பட 13 பேர் எகிப்து அதிபர் தேர்தலில் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இதனை எகிப்து தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.ஷஃபீக் அளித்த அப்பீல் மனுவை தேர்தல் கமிஷன் பரிசிலித்தது. மே மாதம் 23-24 தேதிகளில் அதிபர் தேர்தலின் முதல் கட்டமும், ஜூன் மாதம் 2-வது கட்ட தேர்தலும் நடைபெறும்.

முபாரக்கின் ஆட்சிக் காலத்தில் பதவியில் இருந்த அதிகாரிகள் போட்டியிடுவதை தடைச் செய்யும் சட்டத்தை இஃவானுல் முஸ்லிமீன் உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகளுக்கு செல்வாக்கு மிகுந்த பாராளுமன்றம் நிறைவேற்றியது. இச்சட்டத்திற்கு ராணுவ அரசும் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் கமிஷன் ஷஃபீக் போட்டியிட தடை விதித்தது.
ஆனால், தான் போட்டியிட மனு தாக்கல் அளித்த பிறகே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதாக கூறி ஷஃபீக் மேல் முறையீடுச் செய்தார். இதனை ஏற்றுக்கொண்டு அவருக்கு போட்டியிட தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது.
முபாரக்கின் ஆட்சியில் ராணுவ ஜெனரலாகவும், விமானப் போக்குவரத்து துறை அமைச்சராகவும் பதவி வகித்த ஷஃபீக் போராட்டம் துவங்கிய வேளையில் பிரதமராக்கப்பட்டார்.
இஃவானுல் முஸ்லிமீனின் முஹம்மது நூர்சி, இஃவான்களின் முன்னாள் உறுப்பினர் அப்துல் முனீம் அப்துல் ஃபத்தாஹ், முன்னாள் அரப் லீக் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
முபாரக்கின் உளவுத்துறை அதிகாரி உமர் சுலைமான் உள்ளிட்ட பல வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் அதிபர் தேர்தலில் போட்டியிட தடை விதித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.