புதன், 11 ஏப்ரல், 2012

புனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் - SDPI

புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது , சக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்.

ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான செலவுகள் மிகக்கடுமையாக உயர்ந்துள்ள நிலையிலும், இந்தியாவிலிருந்து மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு ஆண்டும் புனித ஹஜ் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். சக்தி பெற்ற முஸ்லிம்கள், கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய ஹஜ் பயணத்திற்கு அதற்கான பயண செலவுகள் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஒவ்வொரு ஹஜ் பயணிக்கும் மானியம் வழங்கி வருகிறது.



இந்நிலையில் சிலர் காழ்ப்புணர்வுடன் ஹஜ் பயண மானியம் குறித்து சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர்.


முஸ்லிம்களைப் போல புனித பயணம் மேற்கொள்வது மற்ற மதத்தினருக்கு கட்டாயமுமில்லை.   குறிப்பாக ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் ஜெருசலத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்வதை லட்சியமாகக் கொள்வதும் இல்லை. ஹிந்துக்களுக்கு இந்தியாவில் உள்ள புனிதத் தலங்களுக்கு பயணம் மேற் கொள்வதற்கு ஹஜ் பயணம் போல செலவு ஏற்படுவதுமில்லை.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா  “முஸ்லிம்களுக்கு வழங்கப்படுவதைப் போல மற்ற மதத்தினருக்கும் புனிதப்பயணம் மேற்கொள்ள மானியம் வழங்கப்படுமா?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது “சில முஸ்லிம் அமைப்புகள் ஹஜ் பயணத்திற்கு மானியம் வழங்குவதை எதிர்ப்பதாகவும் எனவே ஹஜ் பயணத்திற்கான மானித்தை நிறுத்த அரசு பரிசீலப்பதாகவும் தெரிவித்துள்ளார்.”

இது தவறான கருத்தாகும். இந்திய அளவில் செயல்படும் எந்த பிரபல்யமான முஸ்லிம் அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ அல்லது இஸ்லாமிய அறிஞர் குழுக்களோ ஹஜ் மானியத்தை எதிர்க்காத நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

எனவே ஹஜ் பயணத்திற்கான மானியத்தை தொடர்ந்து வழங்குவதோடு, நாளுக்கு நாள் அதிகமாகும் செலவுகளை கருத்தில் கொண்டு ஹஜ் பயணிகளுக்கான மானியத்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவின் அவர்கள் செய்தி வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.